![]()
திருமந்திரம் ( பாகம் 32 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) அருட்செல்வம் – அதைத் தேடுவீர் “பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே” பாடல் 210 சூரியன் உதித்துக் காலைப் பொழுது விடிந்ததுமே வயிற்றுப் பசியை அடக்க அரிய பொருட் செல்வத்தைத் தேடுவீர்கள். எந்தக் குழியை நிரப்பினாலும் இறைவன் புகழை மறவாது போற்றுங்கள். போற்றினால் மன அழுக்கு அகலும். அழுக்ககன்றவுடன் அப்பிறவிக் குழி தானே மூடிவிடும். ![]()
பசிக்குணவு பரமன் அருள்
“கற்குழி தூரக் கனகமும் தேடுவர் அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே” பாடல் 211 வயிற்றுப் பசியை அடக்க, அந்தக் குழிக்குள் போட்டு அடைக்க, உலகத்து மக்களே! நீங்கள் பொன்னைத் தேடுவீர். அந்தக் குழியை அடைப்பது எவருக்கும் எழிதான செயல் அன்று. ஓயாது பசி எடுத்துக் கொண்டே இருக்கும். உண்ண உண்ணக் குறையாது. எனவே அந்தக் குழியைத் தூர்க்கும் அறிவைத் தரும் இறைவனை நீங்கள் நினைந்து துதியுங்கள். துதித்தால் பிறவித்துயருக்குக் காரணமான வினை விலகிப் போவதால் அக்குழி அடைபடும். பசிப் பிணியோடு பழவினை போகும் “தொடர்ந்து எழும் சுற்றம் வினையினும் தீய கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே உடந்தொரு காலத்து உணர்விளக் கேற்றித் தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே” பாடல் 212 உயிரைத் தொடர்ந்து பிறவிதோறும் வரும் சுற்றங்கள், பற்றி வரும் வினைப் பயன்களைவிடத் தீமையானவை. எனவே வாழ்நாள் கழிந்து, உயிர் உடலை விட்டுப் பிரிந்து போவதற்கு முன்பாக உலகப் பற்றுக்களில் இருந்து விடுபட்டு, உள்ளத்தில் ஞான விளக்கேற்றி, நாதனை இடைவிடாது வழிபட்டால் பசிப் பிணியையும் போக்கலாம், வினைப் பயனில் இருந்தும் விடுபடலாம். வாழ்க்கை வெறுத்தது! வழிபாடு தொடர்ந்தது! “அறுத்தன ஆறினும் ஆன்இனம் மேவி அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே” பாடல் 213 ஆறு அத்துவாக்களான வன்னம், பதம், மந்திரம், தத்துவம், கலை, புவனம் ஆகியவற்றின் வழியாகவும் ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்கின. ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஒலி, ஊறு, நாற்றம் என்னும் ஐந்தின் வழியாகவும் அளவிட முடியாத துன்பத்தை அடைந்தன. ஒன்றிரண்டு அல்ல பல வல்வினைகள் வந்து வாழ்வை வருத்தின. இத்தனை வழிகளிலும் வதைபட்டு வாடி வாழ்வையே வெறுத்த மனிதன், வேறு வழி காண இயலாது, இதிலிருந்து மீழ இறைவனை வேண்டித் தொழுதான். ஆகுதி வேட்டல் “வசைஇல் விழுப்பொருள் வானும் நிலனும் திசையும் திசைபெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேத முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே” பாடல் 214 வேதத்தை முதலாக உடைய, தளராத முயற்சியுடைய அந்தணர்கள் நெய்யை நெருப்பில் விட்டுத் தீ வளர்த்துச் செய்யும் ஆகுதியான வேள்வி செய்தால், நிறைவுடைய மிக உயர்ந்ததான விண்ணகத் தேவர்களும், மண்ணக மாந்தர்களும், திசை எட்டும் வாழ்பவர்களும், திசைக் காவல் செய்பவர்களான திக்குப் பாலகர் கூட்டமும் நலம் பெருக இருப்பார்கள். தானம் தருமம் வேள்வியின் விளக்கம் “ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறம்கொடுத்து உண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாம் அறிவாலே தலைப்பட்ட வாறே” பாடல் 215 வேள்வியை விரும்பிச் செய்யும் வேதம் ஓதும் அந்தணர்கள், தாம் செய்யவேண்டிய வீட்டுலக வாழ்வுக்காக, வேள்வி செய்யும் போது, தானமும் தருமமும் மற்றவர்க்குச் செய்து, பின்னரே தாம் உண்பார்கள். தம்முடைய நித்தியக் கடமைகளை எண்ணி, நல்லொழுக்கத்தில் நின்றபடி, அறவழி செல்லும் முயற்சியைத் தம்முடைய அறிவு கொண்டு தெரிந்து, அதன்படி நடப்பார்கள். இல்லற வேள்வி இனிது “அணைதுணை அந்தணர் அங்கிஉள் அங்கி அணைதுணை வைத்ததன் உட்பொரு ளான இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது துணைஅணை ஆயதோர் தூய்நெறி ஆமே” பாடல் 216 வேள்வித் தீ வளர்த்து வெளியே செய்யும் தான தருமம் இரண்டிற்கும் துணையான வேள்வி செய்வதன் உட்பொருள், இணை துணையாகக் கணவனும் மனைவியும் சிவமும் சக்தியுமாக அதிகாலைப் பொழுதில் (நள்ளிரவு கடந்து நான்கு மணி) இன்பத்தில் ஈடுபட்டு நல்லறம் காக்க வேண்டும் என்னும் நல்ல நோக்கத்திலேயே ஆகும்.
0 Comments
Leave a Reply. |
சைவசித்தாந்த ரத்தினம்
|