• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 38 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

24/7/2022

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 38 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

தக்கவர்க்குச் செய்தலே தருமம்
“அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே”                            பாடல் எண் 253

பற்று, பந்தம், பாசம் இவற்றை விட்டொழித்த ஞானிகளுக்கு உணவளிப்பதே மேலான தருமம் என்று நீதி நூல்கள் கூறும். இப்படியிருந்தும் பல நூல் கற்று அறிவு மணம் வீச இருப்பதாகச் சொல்லும் மனிதர்கள், அப்படிப்பட்ட ஞானிகளைப் பார்த்தறிந்து, எங்காவது ஒரு ஆறு குளக்கரைகளில் தியானத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்து வந்து உண்ணச் செய்வதால் பெறக்கூடிய புண்ணியப் பயனை அறியாமல் இருக்கின்றார்களே! அந்தோ பரிதாபம்!.

Picture
தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதீர்
“அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
இழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ் சீரே”                      பாடல் எண் 254

ஆணவமாகிய மன அழுக்கைப் போக்கிக் கொள்ளும் அறிவால் உங்கள் மனதை நிறைத்துக் கொள்ளாது இருக்கிறீர்களே! புகழ், செல்வம், இளமை, வசதி இவை எல்லாம் நிறைந்திருக்க, வளம் உங்களைத் தழுவி நின்ற அந்த நாளில் தருமங்களைச் செய்யத் தவறி விட்டீர்களே! கண்ணைத்திறந்து வைத்துக் கொண்டு பார்க்கத்தானே செய்கிறீர்கள், நோய் நொடியால் மனித வாழ்வு குறைவதை, மறைவதை! அப்படி ஒரு நிலை உங்களுக்கு வந்து விட்டால் என்ன செய்வீர்கள்? ஒரு நாள் நோய்க்கொடுமை அல்லது உங்கள் வினைக் கொடுமை மிகுந்து உங்களைக் கீழே தள்ளுமே! அன்று என்ன செய்ய உள்ளீர்? பாழும் மனமே! எண்ணிப் பார். இப்பொழுதே நல்லதைச் செய்ய நாட்டம் கொள்.

உயிர் இருக்கும் போதே அறம் செய்
“தன்னை அறியாது தான்நல்லன் என்னாதுஇங்(கு)
இன்மை அறியா(து) இளையார்என்று ஓராது
வன்மையில் வந்திடுங் கூற்றம் வருமுன்னம்
தன்மையும் நல்ல தவஞ்செய்யும் நீரே”                          பாடல் எண் 255

இப்பாடலின் பொருள் “உயிரை எடுக்க வரும் எமன் எம்மை எப்படிப்பட்டவர் என எண்ணிப் பார்க்கமாட்டான். எம்மை பாவம், நல்லவன், ஏழை, சிறுபிள்ளை என விட்டு விடவும்மாட்டான். எமன் வலிமையுடையவன். எனவே அவன் உயிரைக் கவர்ந்து செல்வதற்கு முன்பாக நல்லதான தானம், தவம் என்பனவற்றைச் செய்யுங்கள் மனிதர்களே” என்பதாகும்.

ஈசனை அறியும் அறிவே அறிவு
“துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே”                              பாடல் எண் 256

வீட்டைத் துறந்து துறவு மேற்கொண்டு, துறவியாகி விட்டவர்களுக்கு, அவர்கள் வழிதொடர உறவுமுறையானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறந்தவர்கள் இவ்வுலகப் பொருட்கள் வழி பெறப்போகின்ற இன்பங்கள் எதுவும் இல்லை. நல்லறம் செய்ய மறந்தவர்களுக்குத் துணையாகி வழிகாட்ட ஈசனும் வரமாட்டான். இதை எல்லாம் எல்லாரும் அறிந்திருக்கின்றனர். என்றாலும் அறச் செயல் புரியும் அறிவு மட்டும் பெறாதவராயிருக்கிறார்களே!

அறிவே தெய்வம்
“தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்காள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே”                          பாடல் எண் 257

செய்த தவப் பயனால் மனிதனாகப் பிறந்து, அறிவே தெய்வம் என்று அறிந்து, அந்த அறிவாகிய தெய்வத்தை வழிபட மேலான தவத்தைச் செய்து பெருமை பெறுவார்கள் ஞான மார்க்கத்தை நாடுபவர்கள். மனிதர்களே உடலையே தெய்வம் என்று எண்ணி உயிர் வாழ்கின்ற பலரையும், எமன் ஒருநாள் நான்தான் தெய்வம் என்று வந்து உயிரைக் கொண்டு போவான்.

துன்பக் கடல் கடக்கும் தோணி தானம், தவம்
“திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே”                     பாடல் எண் 258

வினைப்பயனால் வந்த இந்தப் பிறவியும் வாழ்வும் பெரியகடல். இதில் நாம் திளைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிறவித் துயர்க் கடலை விட்டொழிய நமக்குத் தோணி போல உதவ இரண்டு வழிகள் இருக்கின்றன. அவையாவன நாமும், நம்மைச் சார்ந்த சுற்றத்தாரும், எல்லையற்ற புகழுடையவனான பரம் பொருளின் திருவடித் துணைகொண்டு துறவு நிலையில் நின்று மேற்கொள்ளும் தவம். மற்றது இல்லறத்திலேயே இருந்து செய்யும் தருமங்கள்.

அடுத்தவர்க்கு உதவுக! இதுவே ஆண்டவன் கட்டளை
“பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்று உங்களால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றுஅண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.                    பாடல் எண் 259
​
உயிர்த் துணையாக இருக்கின்ற பரம்பொருளை, இவ்வுலகில் குறையொன்றும் கூறாமல், அறவழி அல்லாத வேறு வழிகளிலே செல்லாது, அறவழியிலேயே நின்று, நீங்கள் ஒருவருக்கு ஒன்றை கொடுத்து உதவிய அந்த ஈகையே, உங்களுக்கு உற்ற துணை. இதுவே பரம்பொருள் வாழும் உயிர்கள் பேரின்ப வீடடைய வைத்த வழித்தடம் ஆகும்.
​​
இந்தப் பக்கம் web counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்​

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    March 2020
    February 2020

    அனைத்துப் பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.