காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 25
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
தொடர் 25
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
காத்தவராயன் வசனம்:
|
தம்பி சின்னான், இந்த நீரிலே ஒரு விதமான நறுமணம் வீசுகிறதல்லவா?
|
சின்னான் வசனம்:
|
அண்ணா, அப்படி எதுவும் எனக்குத் தெரியவில்லயே.
|
காத்தவராயன் பாடல்:
|
மஞ்சளெல்லோ சின்னான் மணக்குதடா -எனக்கு
மதிமயக்கம் தம்பி கொள்ளுதடா |
சின்னான் பாடல்:
|
மஞ்சளெல்லோ அண்ணா மணக்குதென்று - நீங்கள்
மதிமயக்கம் அண்ணா கொள்ள வேண்டாம் |
காத்தவராயன் பாடல்:
|
அத்தரெல்லோ தம்பி மணக்குதடா - எனக்கு
ஆனந்த மயக்கம் வருகுதடா |
சின்னான் பாடல்:
|
அத்தரிங்கு அண்ணா மணக்கவில்லை -நீங்கள்
அதி மயக்கம் அண்ணா கொள்ள வேண்டாம் |
காத்தவராயன் பாடல்:
|
புனுகுமெல்லோ ராசா மணக்குதடா -எனக்கு
புன் முறுவல் மெல்லப் பூக்குதடா |
சின்னான் பாடல்:
|
புனுகுமெல்லோ புனுகு மணக்கவில்லை -தங்கள்
புன் சிரிப்பு ஏனோ நானறியேன் |
காத்தவராயன் பாடல்:
|
ஆர் குளித்த இந்தப் பொய்கையடா -நீயும்
அறிந்து வந்து துரையே சொல்லேனடா |
சின்னான் வசனம்:
|
அண்ணா இவ்விடத்தில் அமருங்கள் இது யார் குளித்த பொய்கையென்று வேடுவனிடத்தில் அறிந்துவருகின்றேன்.
வேடுவனே! இந்தப் பொய்கையில் யார் வந்து நீராடுவது? |
வேடுவன் வசனம்:
|
ஐயா, ஆயிரம் பேருக்கு அரியதோர் தங்கை ஆரியப்பூமாலை நீராடும்
பொய்கை தான் இது. |
சின்னான் வசனம்:
|
ஓகோ..... அப்படியா சங்கதி.
அண்ணா... |
சின்னான் பாடல்:
|
ஆயிரம் பேரிற்கு அரிய தங்கை - அழகு
ஆரியப்பூ மாலை குளித்த பொய்கை |
காத்தவராயன் வசனம்:
|
தம்பி, ஆரியப் பூமாலை குளித்த பொய்கை இவ்வளவு வாசனை என்றால் அந்த ஆரியப் பூமாலை எப்படி இருப்பாள்.
எதற்கும் அந்த வேடுவனிடம் விசாரிப்போம் வா. வேடுவரே இந்தப் பொய்கையிலே தினமும் நீராடும் அந்த ஆரியப் பூமாலையின் அழகு வடிவை சற்று விவரிக்க முடியுமா? |
வேடுவன் வசனம்:
|
ஐயா,
அந்தமங்கை இங்கே நீராடுவதற்குப் பலத்த பாதுகாப்புடனேயே வருவாள். சில வேளை மிருகங்கள் ஏதாவது விக்கினங்கள் செய்தால் என்னை அழைத்து வேட்டையாடச் செய்வார்கள். அப்படியான வேளைகளில் அந்த அரசிளங்குமாரியை நான் பார்த்திருக்கின்றேன். |
காத்தவராயன் பாடல்:
|
கூந்தலுமோ மாலைக்கு எவ்வளவு - எந்தன்
கோதையவள் மாது எவ்வழகு |
வேடுவன் பாடல்:
|
எல்லாருடை ஐயாவே கூந்தலுந்தான் - அங்கே
ஒரு முழமாம் ஐயாவே இருமுழமாம் அந்த ஆரியப்பூமாலை கூந்தலுந்தான் - என்னாலை அளவிடவோ ஐயா முடியுதில்லை |
காத்தவராயன் பாடல்:
|
மேற்புருவம் வேடுவனே எவ்வழகு - எந்தன்
மெல்லியலாள் மாலை எவ்வழகு |
வேடுவன் பாடல்:
|
மேற்புருவம் ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல
வேப்பமிலை அழகுச் சாயலைப்போல் |
காத்தவராயன் பாடல்:
|
மேற்புருவம் வேடுவனே இவ்வழகு - அவளின்
நெற்றியும் தான் வேடுவா எவ்வழகு |
வேடுவன் பாடல்:
|
நெற்றியெல்லோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த
நிலவினது மூன்றாம் பிறையது போல் |
காத்தவராயன் பாடல்:
|
கண்ணழகோ மாலைக்குச் சொல்லேனடா - அந்தக்
கன்னிகையின் அழகைக் கூறேனடா |
வேடுவன் பாடல்:
|
கண்ணழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அழகுக்
கருங்குவளை மலரின் சாயலைப் போல் |
காத்தவராயன் பாடல்:
|
கண்ணழகோ கன்னிக்கு இவ்வழகு - அவளின்
சொண்டழகை வேடுவனே சொல்லேனடா |
வேடுவன் பாடல்:
|
சொண்டழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த
சோலைக் கிளி சிவந்த சொண்டது போல் |
காத்தவராயன் பாடல்:
|
சோலைக்கிளி மாலை இவ்வழகு - அவள்
பல்வரிசை பார்த்துச் சொல்லேனடா |
வேடுவன் பாடல்:
|
பல்லழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல
பவளமது கோர்த்து நிரைத்தது போல் |
காத்தவராயன் பாடல்:
|
மூக்கழகோ வேடுவனே எவ்வழகு - எந்தன்
மொய் குழலாள் மாலை எவ்வழகு |
வேடுவன் பாடல்:
|
மூக்கழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த
மூங்கிலது ஐயாவே முளையது போல் |
காத்தவராயன் பாடல்:
|
கழுத்தழகோ மாலைக்கு எவ்வழகு - எந்தன்
கண்மணியாள் மாது தான் எவ்வழகு |
வேடுவன் பாடல்:
|
கழுத்தழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - இளம்
கதலி வாழை அழகுத் தண்டது போல் |
காத்தவராயன் பாடல்:
|
கழுத்தழகோ வேடுவனே இவ்வழகு - எந்தன்
கன்னி நல்லாள் மாலை எவ்வழக்கு |
வேடுவன் வசனம்:
|
ஐயா ஆரியப் பூமாலையின் ஒவ்வொரு அங் அசைவுகளையும் இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் ஐயா. நீங்களும் கேட்டுக் கோண்டே போகலா ஐயா. மொத்தத்தில் இத்தனை அழகும் நிறைய பெற்றவள் தான் அந்த ஆரியப்பூமாலை.
|
காத்தவராயன் பாடல்:
|
மாலை தரித்தவளோ வேடுவனே சொல்லாய்
மாங்கல்யம் சூடினளோ வேடுவனே பாராய் |
வேடுவன் பாடல்:
|
மாலை தரிக்கவில்லை மாது கன்னி மாலை
மாங்கல்யம் சூடவில்லை ஐயாவே பாராய் |
காத்தவராயன் பாடல்:
|
கூறை அணிந்தவளோ ஆரியப்பூமாலை
குங்குமம் தரித்தவளோ வேடுவனே சொல்லாய் |
வேடுவன் பாடல்:
|
கூறை அணியவில்லை ஐயாவே கேளாய்-அவள்
குங்குமம் தரிக்கவில்லை ஐயாவே பாராய் |
காத்தவராயன் பாடல்:
|
மஞ்சள் தரித்தவளோ ஆரியப்பூமாலை
மணமாலை ஏற்றவளோ வேடுவனே கூறாய் |
வேடுவன் பாடல்:
|
இன்னும் மணமாகவில்லை ஐயாவே கேளாய்
மணமாலை ஏற்கவில்லை ஐயாவே பாராய் |
வேடுவன் வசனம்:
|
ஐயா! அந்த ஆரியப்பூமாலையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதையா? அவள் என்ன செய்வாள் தெரியுமா?
|
காத்தவராயன் வசனம்:
|
என்ன செய்வாள் வேடுவனே?
|
வேடுவன் பாடல்:
|
போனால் விடமாட்டாள் ஐயா ஐயாவே கேளாய் - அவள்
போட்டிடுவாள் பெருவிலங்கு ஐயாவே பாராய் |
காத்தவராயன் பாடல்:
|
போனவுடன் புருஷன் என்று ஆரியப் பூமாலை
போற்றி முத்தம் தான் தருவாள் எந்தனது மாலை |
வேடுவன் பாடல்:
|
கண்டால் விடமாட்டாள் ஐயா ஐயாவே கேளாய் - அவள்
கட்டிவைத்தோ விலங்கிடுவாள் ஐயாவே பாராய் |
காத்தவராயன் பாடல்:
|
கண்டவுடன் கணவன் என்று ஆரியப்பூமாலை
கட்டி முத்தம் தான் தருவாள் ஆரியப்பூமாலை |
வேடுவன் வசனம்:
|
ஐயா, என்னவோ யோசித்து செய்யுங்கள். எனக்கு நேரமாகுது. நான் சென்று வருகின்றேன்.
|
|
தொடரும்.....
|
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.